tamilnadu

img

காஷ்மீர் திறந்த வெளி சிறைச்சாலை போல் உள்ளது பிபிசி நிருபரின் நேரடி ரிப்போர்ட்

கடந்த 70 ஆண்டு காலமாக அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமையிலிருந்து முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் சிறை வைக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறது. பிபிசியின் கீதா பாண்டே அந்தப் பகுதியில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார். தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக தோன்றியுள்ள கசப்புணர்வால் அப்பகுதியில் புதிய மோதல்கள் உருவாகும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. 24 மணி நேர ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் ஸ்ரீநகரின் மையப் பகுதியில் உள்ள கான்யார் என்ற பகுதியை அடைவதற்கு நாங்கள் ஒரு டஜன் சாலைத் தடைகளை கடக்க வேண்டியிருந்தது. அங்கு மீண்டும் ஒரு தடையை நாங்கள் கடந்து வந்தபோது, சில புகைப்படங்கள் எடுப்பதற்காக எனது காரில் இருந்து நான் இறங்கினேன்.அருகில் உள்ள பகுதிகளில் இருந்து சிலர் வந்து, முற்றுகைக்கு ஆளான சூழ்நிலையில் தாங்கள் வாழ்ந்து வருவதாகப் புகார்கள் கூறினர். மிதமிஞ்சிய ரவுடித்தனம் “அரசின் இந்த முயற்சி, மிதமிஞ்சிய ரவுடித்தனமாக இருக்கிறது’’ என்று அந்தக் குழுவில் உள்ள மூத்தவர் ஒருவர் கூறி னார். எங்களை விரட்டுவதற்கு துணை ராணு வத்தினர் முயற்சி செய்தனர். ஆனால் அவரு டைய கருத்தை நாங்கள் கேட்க வேண்டும் என்று அந்த நபர் விரும்பினார். “பகலில் எங்களை பூட்டி வைக்கிறீர்கள். இரவிலும் பூட்டி வைக்கிறீர்கள்” என்று தனது விரல்களை நீட்டி கோபத்துடன் கூறினார் அந்த நபர். ஊரடங்கு அமலில் இருப்பதால், உடனடி யாக உள்ளே போக வேண்டும் என்று காவல்துறை யினர் கூறினர். ஆனால் எளிமையான அந்த வயதான நபர் உறுதியாக அங்கேயே நின்று அவருடன் மீண்டும் வாக்குவாதம் செய்தார். அந்த சமயத்தில், அங்கிருந்து செல்லுமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், நான் புறப்படுவதற்கு முன், தன் குழந்தையைக் கையில் ஏந்தியபடி அங்கு வந்த ஓர் இளைஞர், இந்தியாவுக்கு எதிராகப் போராட தாம் துப்பாக்கி ஏந்துவதற்குத் தயாராக இருப்பதாக கூறினார். “இது என்னுடைய ஒரே மகன். அவன் இப்போது மிகவும் சிறியவன். ஆனால் அவனும் கூட துப்பாக்கி ஏந்தும் வகையில் அவனை நான் தயார் செய்வேன்” என்று அவர் கூறினார். எனக்கு அருகே நிற்கும் காவல் துறை காவலர் சுடக் கூடிய தொலைவுக்குள் நின்று கொண்டிருக்க இதைச் சொல்வது பற்றி தமக்கு  எந்தப் பயமும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் கோபமாக இருந்தார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில், பாதுகாப்புப் படை யினரின் பயத்துடன் இனிமேலும் வாழ விரும்பவில்லை என்று கூறிய ஒருவரை நான் சந்தித்தேன். 30 ஆண்டுகளாக இங்கே சண்டை நடந்து வரும் நிலையில், தொலைவில் உள்ள தில்லியின் “சர்வாதிகாரமான உத்தரவு” என்று இதை  அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். ஒருபோதும்  பிரிவினைவாதத்தை ஆதரிக்காத மக்களை ஒரு மூலைக்குத் தள்ளிவிட்டார்கள் என்று குறிப்பிட்டனர்.இது காஷ்மீருக்கும் இந்தியா வுக்கும் தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறினர். அச்சம் - கோபம் - எதிர்ப்பில் உறுதி நான் சென்ற இடங்களில் எல்லாம் இதுதான் அதிகம் காணப்பட்ட உணர்வாக இருந்தது - அச்சம் மற்றும் கவலை சேர்ந்த கோபம். அதோடு மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ற கடும் உறுதி. ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீரின் கோடைக்கால தலைநகர். திங்கள்கிழமை காலையில் இருந்து முழுமையாக அந்த நகரம் மூடப்பட்டுள்ளது. கடைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அலு வலகங்கள் அனைத்தும் இன்னும் மூடிக் கிடக் கின்றன. சாலைகளில் பொதுப் போக்குவரத்து இல்லை. துப்பாக்கி ஏந்திய ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள னர். கம்பிச் சுருள்கள் வைத்து சாலைத் தடுப்புகள் அமைத்துள்ளனர். பொது மக்கள் வீடு களிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.சுமார்  ஒரு வார காலமாக, முன்னாள் முதல்வர்களில் இரண்டு பேர் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். மூன்றாவது நபர் தற்போது இந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டு, தற்காலிக சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். இப்போது காஷ்மீர் “சிறையைப் போல, பெரிய திறந்தவெளி சிறையைப் போல இருக் கிறது” என்று ரிஸ்வான் மாலிக் என்பவர் கூறினார். காஷ்மீர் குறித்த தனது திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த

திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 48 மணி நேரத்துக்குள் இவர் தில்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்துள்ளார். இரண்டு நாட்களாக தனது பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் ரிஸ்வான் மாலிக் தில்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்துள்ளார். இணையம் உள்பட, தகவல் தொடர்பு வசதிகள் அனைத்தையும் அரசு முடக்கியதற்கு சில மணி நேரம் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கடைசியாக தனது பெற்றோருடன் பேசியதாக அவர் தெரிவித்தார். தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப் பட்டுவிட்டது. அதனால் தனது நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், நேரில் செல்ல முடிவு செய்ததாக அவர் கூறினார். “யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது என் வாழ்க்கையில் இதுதான் முதல்முறை. கடந்த காலத்தில் எப்போதும் இதுபோல நான் பார்த்தது இல்லை” என்று ஸ்ரீநகரில் தனது பெற்றோரின் இல்லத்தில் இருந்தபடி அவர் என்னிடம் கூறினார்.

ஜனநாயக நாடு என நம்ப வேண்டும் என்றால்...
காஷ்மீருக்கு ஓரளவு தன்னாட்சியை வழங்கிய, பல தசாப்தங்களாக இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் நல்லுறவுக்கு அடிப் படையாக இருந்த சிறப்பு அந்தஸ்தை, அந்த மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் இந்தியா ரத்து செய்துவிட்டது என்று மாலிக் கோபமாக இருக்கிறார். அவர் பிரிவினையை ஆதரிப்பவர் அல்ல அல்லது போராட்டத்தின்போது ராணுவ வீரர்கள் மீது கல் வீசியவர் அல்ல. உயர் லட்சியங் கள் கொண்ட 25 வயது இளைஞர். தில்லியில் அக்கவுண்ட்ண்ட் படிப்பு படிக்கிறார். இந்தியாவின் பொருளாதார வெற்றிகளால் ஈர்க்கப்பட்ட காரணத்தால், இந்தியா என்ற நாட்டின் சிந்தனை மீது நீண்டகாலமாக அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். “இந்தியா ஜனநாயக நாடு என்று நாங்கள் நம்ப வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் அவர்களையே முட்டாளாக்கிக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். நீண்ட காலமாக இந்தியா வுடன் காஷ்மீர் சுமூகமற்ற உறவு கொண்டி ருக்கிறது. ஆனால் எங்களுக்கான சிறப்பு அந்தஸ்துதான் இரண்டையும் இணைக்கும் பாலமாக இருந்தது. அதை ரத்து செய்ததன் மூலம் எங்கள் அடையாளத்தை அவர்கள் அகற்றிவிட்டார்கள். இது எந்தக் காஷ்மீரிக்கும் ஏற்புடையது அல்ல” என்று அவர் கூறினார். முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டு, போராட்டக்காரர்கள் வீதிகளுக்கு வரும்போது, ஒவ்வொரு காஷ்மீரியும் அதில் சேரக்கூடும் என்று மாலிக் கூறுகிறார். “ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சகோதரர் பிரிவினைவாதிகளுடனும், இன்னொருவர் இந்தியாவுடனும் இருப்பதாகச் சொல்வார்கள். இப்போது அவர்கள் இருவரையும் இந்திய அரசு  ஒன்று சேர வைத்துவிட்டது” என்றார் அவர்.

இதைவிட மரணமே மேலானது
அவருடைய சகோதரி 20 வயதான ருக்சர் ரஷீத், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை மாணவியாக உள்ளார். தொலைக்காட்சி யில் உள்துறை அமைச்சரின் உரையை கேட்ட போது, தன்னுடைய கைகள் நடுங்கியதாகவும், அருகில் அமர்ந்திருந்த தன் தாயார் அழத் தொடங்கிவிட்டார் என்றும் அவர் கூறினார். “இதைவிட மரணமே மேலானது” என்று தனது தாய் கூறியதாக கூறுகிறார் ரஷீத். “பதற்றத் துடன் திடீரென நான் எழுந்து கொள்கிறேன். நகரில் பட்மலூ பகுதியில் எனது தாத்தா  பாட்டி வசிக்கின்றனர். இது ஆப்கானிஸ்தானைப் போல ஆகிவிட்டது என அவர்கள் கூறினர்” என்று ரஷீத் குறிப்பிட்டார். தனது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் குறித்து, பெரியதொரு நடவடிக்கை எடுக்க சில காலமாகவே இந்தியா பணிகளை மேற்கொண்டி ருந்தது. அந்தப் பகுதிக்குக் கூடுதலாக 35 ஆயிரம் ராணுவத்தினரை அனுப்புவதாக கடந்த மாத இறுதியில் முதலில் அரசு அறிவித்தது.

எதிர்பார்க்கவில்லை...
கடந்த வாரத்தில், இந்துக்கள் ஆண்டு தோறும் மேற்கொள்ளும் அமர்நாத் யாத்திரை, தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து திடீரென நிறுத்தப்பட்டது. பிறகு, ஹோட்டல்கள், தால் ஏரியில் உள்ள படகு இல்லங்கள் ஆகியவையும் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர். ஏதோ நடக்கப் போகிறது என்று காஷ்மீரில் உள்ள எல்லோருக்கும் அப்போது தெரிந்து விட்டது. ஆனால் நான் பேசிய ஒரு டஜன் பேரும் தில்லி இந்த அளவுக்குச் சென்று, ஒருதலை பட்சமாக அரசியல் சாசனத்தை ரத்து செய்யும் என எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர். யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. தகவல் தொடர்புகள் முடக்கம் காரணமாக, நம்பகமான தகவல்கள் எதையும் பெற முடியவில்லை. வாய் மொழியாக பரவும் தகவல்கள்தான் செய்தியாக உள்ளன. ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஸ்ரீநகரிலும், மற்ற பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் மீது கற்கள் வீசும் போராட்டங்கள் தினமும் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினர் விரட்டிய போது  ஆற்றில் குதித்த ஓர் இளைஞர் உயிரிழந்து விட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். ஆனால், காஷ்மீரில் எல்லாமே நன்றாக இருப்பதைப் போன்ற எண்ணத்தை உருவாக்க இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

வெறும் நாடகம்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “தீவிரவாதத்தின் மையம்” என்று இந்திய ஊடகங்களால் குறிப்பிடப்படும் ஷோபி யான் நகரின் தெருக்களில் சில ஆண்களுடன் அவர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடும் காட்சிகள் புதன்கிழமையன்று சில செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. மிகவும் மோசமான பகுதிகளிலும் கூட இந்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு  இருக்கிறது, அமைதி நிலவுகிறது என்று உலகிற்குக் காட்டுவதற்கான முயற்சி அது.ஆனால், அது வெறும் நாடகம் என்று காஷ்மீரி மக்கள் கூறுகின்றனர். ``மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால், ஊரடங்கு எதற்கு? எதற்காக தகவல் தொடர்பை முடக்கி வைக்க வேண்டும்?’’ என்று கேட்கிறார் ரிஸ்வான் மாலிக். ஸ்ரீநகரின் ஒவ்வொரு பகுதியிலும் - வீடு களில், தெருக்களில், பதற்றம் நிறைந்த பழைய நகரப் பகுதிகளில் - இதே கேள்விகள்தான் எதிரொலிக்கின்றன. புல்வாமா மாவட்டத்திலும் இதே நிலைதான்.  கடந்த பிப்ரவரி மாதம் அங்கு நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் பகுதி வழியாக நான் காரில் சென்றபோது, அங்கே குழுக்களாக சாலையோரம் நடந்து சென்றவர்கள் அல்லது வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள், என்னிடம் பேசுவதற்காக நிறுத்தச் சொன்னார்கள். காஷ்மீர் மக்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என்றும், தங்களுடைய கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். எவ்வளவு கோபத்தில் இருக்கிறோம் என்றும், ரத்தம் சிந்தும் போராட்டத்தைத் தவிர்க்க முடியாது என்றும் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்

முற்றுகை விலகியதும் பிரச்சனை தொடங்கும்
“இந்த சமயத்தில் காஷ்மீர் முற்றுகைக்கு ஆளாகியுள்ளது. அது விலக்கப்பட்ட உடனே பிரச்சனை தொடங்கிவிடும்” என்று புல்வாமா வில் வசிக்கும் வழக்கறிஞர் ஜாஹித் உசேன் டார் கூறினார். “அரசியல் மற்றும் பிரிவினைவாதத் தலைவர்கள் தடுப்புக் காவல் அல்லது வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும், போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். மக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவிப்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். காஷ்மீரில் இதுவரை அசம்பாவிதம் எதுவும்  நடக்கவில்லை என்பதால், அரசின் முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாக அர்த்தமாகிறது என்று இந்திய ஊடகங்களில் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், காஷ்மீரில் நிலைமை கொதிப்பாக இருப்பதை நான் பார்க்க முடிந்தது. இந்திய ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பற்றி செய்தி சேகரிக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் நான் அவ்வப்போது பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் இப்போது காணப்படும் கோபமும், எதிர்ப்பும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கிறது. அரசு தனது உத்தரவை வாபஸ் பெற்று, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றும் அதைத் தவிர வேறு எதையும்  தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால் இதுவரை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தான் எடுத்த முடிவு களை திரும்பப் பெற்றதில்லை என்பது தெரிந்த விஷயம். இதனால் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

புயலுக்கு முன் அமைதி
சர்ச்சைக்குரிய தனது முடிவை, வியாழக்கிழமை மோடி நியாயப்படுத்தி யுள்ளார். இது “புதிய யுகத்தின் தொடக்கம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கு அவர் உத்தரவாதம் அளித்துள் ளார். ஆனாலும் இங்குள்ள பலர் விட்டுத் தர தயாராக இல்லை. அது காஷ்மீரிகள் அல்லது இந்தியாவுக்கு நல்லதாகத் தோன்றவில்லை. “இப்போதைய சூழ்நிலை புயலுக்கு முன்னே அமைதி என்பதைப் போல இருக்கிறது” என்று உயர்நிலைப் பள்ளி மாணவி முஸ்கான் லத்தீப் கூறினார். “சமுத்திரங்கள் அமைதியாக இருப்பதைப்போல இப்போது உள்ளது. ஆனால், கரையை சுனாமி தாக்கப் போகிறது’’ என்றார் அவர்.
- கீதா பாண்டே

;